Home » , , » இசைஞானி இளையராஜா | “இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியத்தின் பேரரசன்” | காண்பதற்கரிய புகைப்படங்கள் உள்ளே 👉🏻

இசைஞானி இளையராஜா | “இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியத்தின் பேரரசன்” | காண்பதற்கரிய புகைப்படங்கள் உள்ளே 👉🏻

Written By Prathees on 02 June 2021 | 12:32 PM

இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் கொண்ட இன்னிசை தீரனான இசைஞானி இளையராஜா இன்று(ஜூன்.2) தனது 78வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இளையராஜா இந்த பெயரை தமிழ் மக்களால் அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. கவி போற்றும் காலத்தில், புலவர்கள் தான் இயற்றும் பாடலில் போற்றும் தலைவனை, “பாட்டுடைத்தலைவன்” என்பார்கள். இந்த இன்னிசை தீரனான பண்ணைபுரத்துக்காரன் பாட்டுக்கே தலைவனான். மக்களின் மனம் அறிந்து மண்ணை ஆண்டவர்கள் இங்கு பலர் உண்டு, ஆனால் மண்ணை அறிந்து மக்கள் மனங்களை கொள்ளை கொண்டவர் இளையராஜா மட்டுமே. இது கிராமம் என்று சொல்லி கடந்து செல்லும் மக்களின் மத்தியில், அம்மண்ணின் மக்களின் வாழ்வியலை இசை கொண்டு உலகறியச் செய்தவர். வயல்வெளி பாடல்களைப் பளிங்கு சாரீரமாக அனைவருக்கும் கடத்தியவர் இந்த ராஜா.

Ilaiyaraaja 78th Birthday

நம்மை மகிழ்ச்சியில் தூக்கிச் செல்வார். 'உனக்குத் தேவையானதை எடுத்துக் கொள்..!' என்று சொல்லும் ஒற்றை இசை அகராதி அவர். மொழி தெரியாத இந்தி பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த 1976 காலகட்டத்தில், 'அன்னக்கிளி' படத்தில் 'மச்சான பாத்தீங்களா'... எனும் பாட்டு மூலம் ஒட்டுமொத்த இசையுலகத்தையும் தன் பக்கம் திரும்ப வைத்தவர். ஒவ்வொரு பாடல்களுக்கும், பின்னணி இசை மூலம் படத்திற்கும் உயிர் கொடுத்த தாயுமானவர். ராஜா ஒரு அனிச்சை அட்சயம். குள்ள உருவம்தான் நம்மைக் கொள்ளை அடித்து வைத்திருக்கிறது. இசையில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. அத்தனை வகைகளையும் கலை கெடுக்காமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். தமிழ் திரைத்துறையில் பெரும் இசைப்புரட்சியைச் செய்த அன்னக்கிளியில் குயில் கூவ ஆரம்பித்தது அந்த குயில் இன்று வரை கூவுவதை நிறுத்தவே இல்லை.

தேசிய விருது பெறும் இளையராஜா

தேசிய விருது பெறும் இளையராஜா

மகேந்திரன், பாலு மகேந்திரா, பாரதிராஜா என எளிய மக்களின் வாழ்க்கையைப் பாசாங்கு இல்லாமல் படமாக்கும் இயக்குநர்களின் படங்களில் இளையராஜா கொடுத்த பாடல்களும், மெல்லிய உணர்வுகளைக் கடத்தும் பின்னணி இசையும் காலம் கடந்தும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. பாலுமகேந்திரா இயக்கிய 'வீடு' படத்தில், கட்டுமானத்தில் இருக்கும் புதிய வீட்டை முதியவர், சுவரைத் தடவிக் கொண்டு ஆனந்த பூரிப்புடன் சுற்றிப் பார்க்கும் வசனமில்லாத காட்சியில் புல்லாங்குழல், வயலின் மூலம் இளையராஜா கொடுத்த பின்னணி இசை ஒன்று மட்டும் போதும், அவர் பாடல்களில் மட்டுமல்ல... பின்னணி இசையிலும் ராஜா என்பதை நிரூபிப்பதற்கு. தாரை தப்பட்டை, பழசிராஜா ஆகிய படங்களுக்குப் பின்னணி இசைக்காக இரண்டு தேசிய விருதுகளைக் கொடுத்து, மத்திய அரசு பெருமை தேடிக் கொண்டது.

பாலுமகேந்திரா - பாரதி ராஜா உடன் இளையராஜா

பாலுமகேந்திரா - பாரதி ராஜா உடன் இளையராஜா

அதேபோன்று, தமிழ் திரைத்துறையில் இவரின் சமகால கமர்சியல் இயக்குநர்களின் படங்களில் கொடுத்த துள்ளல் இசையும் கொண்டாடப்படுகின்றன. நமக்குத் தெரிந்ததெல்லாம் இசையில் மூன்று. ஃபோக்ஸ், வெஸ்டர்ன், க்ளாசிக்கல். இந்த மூன்றையும் 'ராக்கம்மா கையத் தட்டு பாடலில் யூஸ் பண்ணி பின்னியிருப்பார். ஒரு ஜீவன் அழைத்தது... நாதம் என் ஜீவனே... மெதுவா மெதுவா ஒரு... தென்றல் வந்து தீண்டும்போது... ஒளியிலே தெரிவது தேவதையா... இளங்காற்று வீசுதே... நான் தேடும் செவ்வந்திப் பூவிது... என காலம் கடந்த ஆயிரக்கணக்கான கிளாஸ்சிக் பாடல்களைத் தந்த ஒரே இசை வரலாற்றில் சரித்திரக் குறியீடு அவர்.தானாக உருவெடுத்த சுயம்பு லிங்கம் போல் இளையராஜா மட்டும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்...இருப்பார். அவர் இசையும் வாழ்ந்து கொண்டே இருக்கும். ஏனெனில் அவர் ஒரு ஞானி. இளையராஜாவின் பேச்சுக்களை வைத்து அவரை வசைபாடித் தீர்க்கின்றனர் . ஆனால் அவர்கள் பாடும் வசைகளையும் இசையாக்குவார். தொட்டிலுக்கும் அவர்தான் கட்டிலுக்கும் அவர்தான். அவர் பேசுவதை வைத்து அவரை என்ன வேண்டுமானாலும் பேசலாம். பேசுவோம். நம் வார்த்தைகளை அவர் ஸ்வரங்களாகச் சுவீகரிக்கக்கூடியவர். 'ஜன கன மன...' இந்திய நாட்டிற்குத் தேசிய கீதமாக இருக்கலாம். ஆனால் நம் ஜனத்திற்கு கானம் இசைத்தவர் இளையராஜா. ஜன கான ராஜாவுக்கு அந்த இசைக் காணும் அடி பணிய வேண்டும். ஏனெனில் அதுவே அறம்.

"இளையராஜா இல்லாத படங்களை இயக்க வந்த வாய்ப்பை நான் தவிர்த்தேன்" என்று பாலுமகேந்திரா தெரிவித்திருந்தார். ஆம் அவருக்கு மட்டுமல்ல... எவருக்கும் தவிர்க்க முடியாத நபர்தான் இளையராஜா. “இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்” என்றும் உங்களுக்குத்தான். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இளையராஜா சார்.

-தொகுப்பு-
-ச. பிரதீஸ்வரன்-
Share this article :

+ comments + 1 comments

Anonymous
February 1, 2022 at 1:21 AM

1xBet Korean Sportsbook Review - LegalBet.co.kr
1xBet is a betting site which is 1xbet a top sportsbook for South Korean players and is 메리트 카지노 쿠폰 operated by Betsson AB. They offer septcasino odds, live streaming and  Rating: 4.3 · ‎Review by legalbet.co.kr

Post a Comment

 
Support : DTH News | DTH News 1st | DTH News 1st
Copyright © 2021. DTH News - All Rights Reserved
Template Created by Pratheeswaran Published by DTH News
Proudly powered by DTH News 1st